Relationship ( Photo: Pixabay )

டாக்ஸிக் பிஹேவியரைக் கொண்ட நபர், தான் நேசிக்கும் நபரிடம் தன்னைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்.

காதலர்களோ, நண்பர்களோ… இருவரும் நீண்டகாலமாக நல்ல உறவில் இருப்பார்கள். திடீரென அவர்களுக்குள் முறிவு வந்துவிடும். அதன் பின் இருவரும் எதிரெதிர் துருவங்கள்போல ஆகிவிடுவார்கள். இது சிலருக்கு, அவர்களுடைய வாழ்க்கையில் அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்றாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் `டாக்ஸிக் பிஹேவியரை’ வெளிப்படுத்துபவராக இருக்கலாம். அல்லது உங்களுடன் உறவில் / நட்பில் இருக்கும் நபர் `டாக்ஸிக் பிஹேவியர்’ கொண்டவராக இருக்கலாம். இது பற்றி மேலும் அறிந்துகொள்ள உளவியல் நிபுணர்கள் சித்ரா அரவிந்த் மற்றும் லட்சுமி பாய் ஆகியோருடன் பேசினோம். அவர்கள் சொன்ன எட்டு குணாதிசயங்களை வைத்து நீங்களோ அல்லது உங்களோடு உறவில் இருப்பவரோ `டாக்ஸிக் பிஹேவியர்’ கொண்டிருக்கிறீர்களா என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

1. எப்போதும் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பது

Representational Image

Representational Image

`டாக்ஸிக் பிஹேவியர்’ கொண்டவர்கள் ஒருவருடன் சுமுகமான உறவில் இருக்கும்போதும், அவர்கள் மீது நம்பிக்கை குறைந்தவர்களாகவே இருப்பார்கள். தாங்கள் நேசிப்பவரின் நடத்தையின் மீது மட்டுமல்லாமல், அவர்களின் அன்பின் மீதும் சந்தேகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள்தான், தன்னை நேசிப்பவரிடமே, `என்னைப் பிடித்திருக்கிறதா இல்லையா’ , `என் மீது பாசமிருக்கிறதா இல்லையா’ என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு கட்டத்தில் எதிர்முனையில் இருக்கிற நபருக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடும்.

2. தன்னைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருத்தல்

Representational Image

Representational Image

பொதுவாக, டாக்ஸிக் பிஹேவியரைக் கொண்ட நபர், தான் நேசிக்கும் நபரிடம் தன்னைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பார். அந்த நபரைப் பற்றி அவருக்கு அக்கறையே இல்லாததுபோல இருப்பார்.

சரியாகச் சொல்வதென்றால், இவர்கள் உங்களுக்கு அன்பையும் கவனத்தையும் கொடுப்பதைவிட, வாங்குபவர்களாகவே இருப்பார்கள். இப்படிப்பட்ட நபர்கள் எப்போதும் உங்களிடம் எதையாவது எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள் .

3. உங்களை உபயோகப்படுத்திக் கொள்ளும் நபராக மட்டுமே இருப்பார்கள்

உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்

உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்

நேசம், பாசம் என்ற பெயரில் எப்போதும் உங்களை உபயோகப்படுத்திக்கொள்பவராகவே இருப்பார்கள். அது உடல் ரீதியாக, மனரீதியாக, பொருளாதாரத் தேவைக்காக என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தவிர, அவர்கள் சொல்கிறபடிதான் துணை நடக்க வேண்டும் என்ற எண்ணமும் இந்தக் குணம் கொண்டவர்களுக்கு அதிகம் இருக்கும்.

4. நீங்கள் மட்டுமே மன்னிப்புக் கேட்கக்கூடியவராக இருக்கலாம்

உளவியல் நிபுணர் லட்சுமி பாய்

உளவியல் நிபுணர் லட்சுமி பாய்

டாக்ஸிக் பிஹேவியர் நபருடன் உறவில் இருக்கும்போது, எந்தவொரு சிறு பிரச்னையிலும் எப்போதும் மன்னிப்புக் கேட்கக்கூடிய நபராக நீங்கள் மட்டுமே இருக்கக்கூடும். தவறு எதிர்தரப்பில் இருந்தாலும் நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். அவர்கள் எப்போதும் உங்களிடம் மன்னிப்புக் கேட்பதை விரும்ப மாட்டார்கள். இந்த உறவு முறையில் அதீத அன்பே இருந்தாலும்கூட, அத்துனை நிம்மதி இருக்காது.

5. அதிகாரம் செலுத்தக்கூடிய நபர்

Representational Image

Representational Image

நமக்கு நெருக்கமானவர்களிடம் நமது அன்றாட நிகழ்வுகளைப் பகிர்வது வழங்கமான ஒன்றுதான். ஆனால், டாக்ஸிக் பிஹேவியர் நபர்கள், தங்களிடம் சொல்லிய பின்புதான் அந்த வேலைகளைச் செய்ய வேண்டும், தாங்கள் சொல்கிற நேரத்தில்தான் போக வேண்டும் என அதிகாரம் செலுத்தக்கூடிய நபராக இருப்பார்கள். `நான் இல்லையென்றால் உனக்கு எதுவுமே தெரியாது’ என்ற போலியான பிம்பத்தைத் தன் காதலியிடமோ, நட்பிடமோ உருவாக்க முயல்வார்கள். இதனால் உங்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுவதோடு, உங்களுடைய சுயத்தையும் இழப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

6. பாதுகாப்பின்மை

Representational Image

Representational Image

இந்த வகை நபர்களுடனான உறவில் பாதுகாப்பின்மை எப்போதும் இருக்கும். அலுவலகத்திலோ, வெளியிலோ வேறு ஒரு நபருடன் பேசினால், பழகினால் உடனே சந்தேகப்பட்டுவிடுவார்கள். தவிர, தங்களுடைய இயல்பு காரணமாக இந்த வகை நபர்களும் எப்போதும் பாதுகாப்பின்மை உணர்விலேயே வாழ்வார்கள். இதனால், அடுத்த நபர் மீது குற்றம் சுமத்தும் மனோபாவமும் இவர்களுக்குள் இருக்கும்.

விளைவு, உறவில் நிச்சயமற்றதன்மை.

7. சுயமரியாதை குறைந்து காணப்படும்

Representational Image

Representational Image

ஒருவரோடு பழகும்போது எப்போதுமே சுயமரியாதை குறைந்து போவதாக நீங்கள் உணர்ந்தீர்களென்றால், அது உங்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய உறவே. இதனால் நம் மீது நாம் கொண்டிருந்த நல்ல மதிப்பு சிதைந்து போவதோடு, நமது அடிப்படையான நல்ல பண்புகளையே மாற்றி அமைக்கக்கூடிய ஒன்றாக எதிர்காலத்தில் மாறிவிடும்.

8. குற்ற மனப்பான்மை அதிகரிக்கும்

நீண்டகாலம் இப்படிப்பட்ட நபருடன் உறவில் இருக்கும்போது குற்ற மனப்பான்மை அதிகரிக்கும். இதனால் செய்யாத தவறுகள்கூட மனதை உறுத்த ஆரம்பிக்கும். இது மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏன், சம்பந்தப்பட்டவர்களின் மனநிலையைக்கூட பாதிக்கலாம்.

மேலே இருக்கும் குணாதிசயங்களில் இரண்டு அல்லது மூன்று இருந்தால்கூட நீங்களும் டாக்ஸிக் பிஹேவியர் கொண்ட நபரே. இதிலிருந்து விடுபட உளவியல் நிபுணரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒருவேளை இந்த இயல்பு உங்களை நேசிப்பவரிடம் இருந்தால், நீங்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அவர்களை உங்கள் அன்பைக் கொண்டு ஒரு போதும் உங்களால் மாற்றிவிட முடியாது. அப்படிப்பட்ட நபரிடம் இதைப் பற்றிப் பேசிப் புரியவைத்து, உளவியல் நிபணரிடம் அழைத்துச் செல்லலாம். அது மட்டுமே உண்மையான அன்புக்கு நீங்கள் செய்யும் கைம்மாறாக இருக்க முடியும்.