ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைத் தொலைதூர கல்விமுறை மூலமாகவோ, ஆன்லைன் முறையிலோ அல்லது பகுதிநேரமுறை (part time) மூலமாகவோ தொடரலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்துள்ளது. இதுகுறித்தான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என யு.ஜி.சி-யின் செயலர் ரஜ்னிஷ் ஜெயின் (Rajnish jain) கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தைப் பற்றி யு.ஜி.சி ஆராய்வது இது முதல்முறை அல்ல. இதேபோன்று 2012-ம் ஆண்டிலும் குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஆனால், அப்போது அந்த முடிவு கைவிடப்பட்டது. ரெகுலர் முறையில் பட்டப்படிப்பில் சேரும் ஒரு மாணவரை அதிகபட்சம் கூடுதலாக ஒரு பட்டப்படிப்பை அதே நேரத்தில் தொலைதூர கல்விமுறை, ஆன்லைன் முறை அல்லது பகுதிநேரமுறை மூலமாகவோ படிக்க அனுமதிக்க வேண்டும் என 2012-ல் அமைக்கப்பட்ட குழுவில், அப்போது ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஃபுர்கான் கமரின் தலைமை பரிந்துரைத்தது.

மாணவர்கள்
Representational Image

ஆனால், அப்படி அனுமதிப்பது அமைப்பு மற்றும் நிர்வாக ரீதியாகச் சிக்கல்களை மட்டுமல்லாமல் கல்வியிலும் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றது யு.ஜி.சி. ரெகுலர் முறையில் பட்டப் படிப்பைத் தொடரும் மாணவர், ஒரே பல்கலைக்கழகத்திலோ வேறு நிறுவனங்களிலிருந்தோ திறந்தவெளி அல்லது தொலைதூர அல்லது ஆன்லைன் முறையில் ஒரே காலத்தில் அதிகபட்சம் ஒரு சான்றிதழ் படிப்பு (certificate course), டிப்ளோமா, Advanced டிப்ளோமா, முதுநிலை டிப்ளோமா ஆகியவற்றில் ஒன்றைப் படிக்க அனுமதிக்கப்படலாம் எனக் கூறியது. ஒரே சமயத்தில் வேறுவேறு பட்டப்படிப்புகளைப் பயில்வது குறித்தான விவாதம் பலமுறை மேற்கொள்ளப்பட்டிருந்தபோதும் எதுவும் நடைமுறைக்குச் சரியாக வரவில்லை.