இந்த ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் தினக்கூலிகளின் ஒரே பிரச்னையாக இருப்பது பசி மட்டும்தான். இப்படிப் பசியினால் இறந்த நாயின் இறைச்சியை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு தொழிலாளி. பிரதுமன் சிங் நருகா (Pradhuman Singh Naruka) என்பவர் கடந்த 18-ம் தேதி தான் சாலையில் கண்ட ஒரு காட்சியை வீடியோவாக எடுத்து அதை தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொழிலாளர்கள்
Photo: AP

ராஜஸ்தானின் ஜெய்பூர் – டெல்லி நெடுஞ்சாலையில் பிரதுமன் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, ஷாஹ்புரா பகுதியில் சாலையில் இறந்து கிடந்த ஒரு நாயின் கறியை ஒரு தொழிலாளி உண்பதைப் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து, `அதைச் சாப்பிடக் கூடாது, சாப்பிட்டால் இறந்துவிடுவாய்’ என அந்த மனிதரை நோக்கிக் கூச்சலிட்டுவிட்டு, தான் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் அந்தத் தொழிலாளிக்குக் கொடுத்து உதவியுள்ளார்.

இது தொடர்பாக பிரதுமன் வெளியிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவில், “ பசிக் கொடுமையால் தொழிலாளி ஒருவர் இறந்த நாய்க் கறியைச் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஷாஹ்புராவில் மனிதம் இறந்துவிட்டது. இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் அந்த வழியாகச் சென்ற யாரும் வாகனத்தை நிறுத்தி அந்த நபருக்கு உதவவில்லை. என்னால் முடிந்தது, அவரை எச்சரித்து உணவும் தண்ணீரும் கொடுத்ததுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.